Tuesday, November 24, 2009

முதிர் கண்ணி...

பூக்காரி கூடையிலே,
108 பூக்கள் அம்மா...

கூவி கூவி விற்ற போதும்,
ஒத்த பூ மிச்சம் அம்மா...

யார் யாரோ பார்த்தாங்க,
விலை கொடுக்க மறுத்தாங்க...

அடி மாட்டு விலைக்கு அத,
எடுத்துக் கொள்ள பார்த்தாங்க...

மனம் வாடா பூவை அவள்...
தெருத் தெருவாய் எடுத்து சென்றாள்.

மொத்த நாளும் சுற்றி விட்டு,
சோர்ந்து போனாள் பூக்காரி...

களைப்பாற நினைத்த படி,
அரச மரத்தடியில் அமர்ந்தாள் அவள்!

விற்காத பூவை அவள்,
அருகில் இருந்த இறைவனுக்கு சூடி விட்டாள்!

விற்காத பூ அன்று,
விலை மதிப்பில்லாத பூ ஆனது!

அன்று ஒரு உண்மை புலப்பட்டது...
சில பூக்கள் விர்ப்பனைக்கு அல்ல!!!

Friday, November 20, 2009

சூழ்நிலைக் கைதிகள்...

ஒரு அடி எடுத்து வைத்தேன்,
தாயின் பாசம் தடுத்தது...
மறு அடி எடுத்து வைத்தேன்,
தந்தையின் முதுமை தடுத்தது...

முன்னேற நினைக்கையில்,
குடும்பம், சமுதாயம், ஏழ்மை, மானம், ரோசம்...
இப்படி அடுக்கு அடுக்காய் கம்பி வேலிகள்...

உடைத்து எறிய துணிவில்லை...
என் கையில் ஏனோ தெம்பும் இல்லை...

சுத்தி முத்தி பார்த்தேன்...
என்னை போல பலரும்,
தெம்பில்லாத மனிதர்களாய்...
எலும்பு இல்லாத ஜந்துகளாய்...
கூட்டம் கூட்டமா அங்கே குமிந்து கிடந்தனர்...

அழுவதுக்கும் முடியவில்லை...
கண்ணீருக்கும் அந்த இடம் பிடிக்கவில்லை போல...
வெளியே வர மறுத்தது...
மாறாய் எதர்க்கும் பழகி போன முகம்,
கண்ணீரை புன்னகையாக வெளிப்படுத்த ஆரம்பித்தது...

நான் எங்கு இருக்கிறேன்???
அருகில் இருந்த நண்பரிடம் கேட்டேன்...
நண்பா... நாம் எல்லாம் "சூழ்நிலை கைதிகள்" என்றான்,
காலில் இருக்கும் சங்கிலியை சரி செய்த படி...

Friday, August 14, 2009

தோல்வி

முதல் தோல்வி...
கண்ணீரில் கரையும்...

அடுத்தடுத்தத் தோல்விகள்,
தொண்டை குழியில் சிக்கும்...

முற்றும் துறந்த பின்,
புன்னகையில் மறையும்...

முயற்சி செய்ய செய்ய,
தோல்வி உன்னிடம் தோல்வி அடையும்!!!

தோற்றுப் பார்,
உன் வாழ்வில் ஏற்றம் வரும்!

உற்றுப் பார்,
உன் தோல்வி வெற்றியாய் மாறும்...

Monday, June 15, 2009

ஆஸ்திரேலியா-வில் அடிக்கிறான்...

அடிக்கிறான்... அடிக்கிறான்...
ஆஸ்திரேலியா-வில் அடிக்கிறான்...
துடிக்கிறான்... துடிக்கிறான்...
இந்தியன் இங்கே துடிக்கிறான்!!!

நிறம் தன்னில் இனம் கண்டு,
வெறி கொண்டு அடிக்கிறான்...
அவன் நாட்டில் குடி புகுந்தோம் என,
சொல்லி சொல்லி அடிக்கிறான்...

உலக நாட்டு மக்களே,
உண்மை உற்று நோக்குவீர்!
உண்மை அதிவாசியை.. .
விரட்டி ஓடி அடித்தவன்...
வெள்ளைத் தோளினை கொண்ட,
ஈரோப்பியன் அவன்...

சொந்த நாடு என்று அதை...
உரிமை கொள்ள பார்க்கிறான்...
மற்ற நாட்டு மனித உரிமையைப்,
பறித்துக் கொள்ளப் பார்க்கிறான்...

அடிக்கிறான்... அடிக்கிறான்...
ஆஸ்திரேலியா-வில் அடிக்கிறான்...
துடிக்கிறான்... துடிக்கிறான்...
இந்தியன் இங்கே துடிக்கிறான்!!!

Tuesday, April 28, 2009

IT பெருங்கடல்

சுனாமி பேர் அலை...
அருகில் இருந்த தென்னை மரத்தைப் பற்றித் தப்பினேன்...
பிழைத்துக் கொண்டேன்என நினைக்கையில்,
தொலைத்தது தான் அதிகம் என உணர்ந்தேன்.
நேற்று இருந்த புன்னகை இன்று இல்லை!
அருகில் நின்ற நண்பன் இன்று இல்லை!
ஆரவார பாடல்கள் இன்று இல்லை!
இத்தனை நாள் சோறு போட்ட IT பெருங்கடல்,
இன்று ஆளை விழுங்கும் சுனாமியாய் தோன்றுகிறது.

Thursday, March 19, 2009

எது கலிகாலம்???

தினத்தந்தியில் ஒரு கொலை செய்தி.
கலிகாலம் என்றான் என் நண்பன்.
மல்லாக்கப் படுத்து, வரலாற்றைப் புரட்டிப் பார்த்தேன்.
நல்ல காலம் எது என தேடி...

முதல் பக்கத்திலேயே,
மூர்ச்சை அடைந்து போனேன்.
அடுத்த அடுத்த பக்கங்களில்,
அடுக்கு அடுக்காய் கொலைகள்...
பதினைந்து பக்கம் தாண்டி ஓடினேன்...
பக்கத்திற்கு பக்கம் கொலைகள்.
பெண்ணை அடைய சில...
பெண்ணை அடக்கி சில...
பொன்னைத் தேடி சில...
மண்ணை நாடி சில...
நாட்டை பிடிக்க சில...
நாட்டை காக்க சில...
மதத்தின் பெயரில் சில...
இனத்தின் பெயரில் சில...
வீரத்தின் அடையாளமாய் சில...

இப்படி பலப் பல கொலைகள்...
படித்து முடிக்கையில்,
என் கைகளில் ரத்த வாடை...
பாவம் மூட்டை பூச்சுக்குத் தெரியுமா?
தான் இருப்பது கலிகாலம் என??? :)

Wednesday, March 11, 2009

Kalinga porum kalikaala porum

ஆசையே துன்பத்ிற்கு காரணம் என்றான் புத்தன்.
எவனோ ஆசை படுவதற்கு, நான் ஏன் துன்ப பட வேண்டும்?
புத்தரின் சிலை அடியில் ஒரு பாமர இலங்கை தமிழன் கேட்கிறான்,
தன் தாயின் பிணத்தை தன் மடியில் கிடத்திய படி!

புலிகளுக்கும் சிங்கங்களுக்கும் சண்டை.
செத்து மடிந்தன அருகில் இருந்தஆடுகள்...
ஆட்டுக்கு ஒரு நியாயம், சிங்கம் புலிக்கு ஒரு நியாயம் படைத்த இறைவா,
ஆடாய் பிறந்தது ஈழ தமிழனின் பாவம் என்றாள்...
நீயும்ஒரு நாள் ஆடாய் பிறவாய்,
பின் தான் ஆட்டின் வலி அறிவாய்.
இது இந்த ஆட்டின் சாபம்.

உன்னை சொல்லி குற்றம் இல்லை...
வேண்டும் அளவுக்கு இரத்தம் குடித்த பின் தானே,
அசோகனின் மனம் மாற்றினாய்.
இப்போது உன் பசி தீர வில்லையா?
இல்லை, இந்த தமிழர்களின் இரத்தம் போத வில்லையா?
நிறுத்த சொல் இந்த அசோகர்களை...

மறந்து விட்டேன் உன் கதையை.
நீ தான் திட்டினாலும் வாங்கி கொள்ள மாட்டாயே!!!
வேண்டுமானால் மன்றாடி கேட்கிறேன்,
எங்கள் குழந்தையின் அழுகுரல் கேட்கவில்லையா?
எங்கள் பெண்களின் கண்ணீர் உன் பாதங்களை நனைக்கவில்லையா?
நான் தனி ஈழம் கேட்டு உன்னிடம் வரவில்லை,
உன் மனத்தின் ஈரம் கேட்டு தான் இங்கு வந்துள்ளேன்.

நான் இப்போது துன்ப படுவது கூட ஆசையினால் தான்!
என் சகோதரன் துன்பம் நீங்க வேண்டும் என்ற ஆசை!!!
என்னால் உன்னை போல் ஆசை துறக்க முடியாது.
ஆசை துறந்து புத்தன் ஆக வாழ்வதை விட,
பிறர் ஆசை நிறைவேற உன்னை வேண்டும்,
பித்தன் ஆக இருக்கவே விரும்புகிறேன்.